வலி

தான்போட்ட குட்டிகளைத் தானுண்ணும்
பூனையொன்றாய்…
நீயுந்தன் பிள்ளைகளை நினைத்தாற்போல்
கொன்றுதின்றாய்.
காவலுக்கு ஆளில்லை
கஷ்டங்கள் தீரவில்லை
வேர்க்குப் பயிர்மேல் விருப்பமில்லை
பசிதீர்க்க
வேறுவழி ஏதுமில்லை…விசத்தால் உணவிட்டாய்!
பச்சை இளந்தளிர்கள்,
பால்ஒழுகும் பூமுகங்கள்,
அர்ச்சிக்கத் தக்க அழகுப்பெண் சித்திரங்கள்,
பார்க்கச் சகிக்கவில்லை….
பாண்கிணற்றில்… வான்பார்த்து
மாரித் தவக்கைகளாய் மாண்டு மிதந்திருந்தார்!
மீன்களை ஒவ்வொன்றாய்
நீரிருந்து தரையிலிட்ட
மாதிரிநீ…ஒவ்வொன்றாய்த்
தரையிருந்து நீரிலிட்டாய்!
மீன்கள் துடித்திறந்தாற் போலுன்
இளங்குட்டி
மான்கள் துடித்திறக்கப் பார்த்தாய்…
உறுதிசெய்து
பாய்ந்தாய்…நீ கிணற்றுள் ஆகுதியாய்ப் போக…
ஆனால்
காலன்நின் கைபிடித்துக் காத்தான்
நீ மூர்ச்சித்தாய்.
தான் போட்ட குட்டிகளைத் தானுண்ணும்
பூனையொன்றாய்
நீயுந்தன் பிள்ளைகளை நினைத்தாற்போல்
கொன்றுதீர்த்தாய்.
நீ மீண்டு…பின்…இன்று நிதானம் இழந்து..உளம்
பேதலித்து நடைப்பிணமாய்… அல்ல
முழுப்பிணமாய்
‘வாழ்கின்றாய்’…உன்வலிக்கு
யார்வந்து மருந்திடுவார்?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply