பஞ்சம்பசி வந்தும், பாய்ந்து சமர் தின்றும்,
பாறவில்லை மண்ணின் அழகு.
பாறையிடை நன்னீர் ஊறும்; நில ஈரம்
பச்சையுடை போக்குந் தனக்கு.
கொஞ்சும் கடல் செல்வம் கொட்டும்; உயர்வானம்
கொண்டுதரும் சொர்க்க அமுது.
கோவில் குளம் எங்கள் குலவிழுமி யத்தின்
குற்றம் கெட வைக்கும்…உணரு!
உண்மையொடு நேர்மை கொண்டது நம் கொற்றம்
ஊழிபல தாண்டி மிளிரும்.
ஒளிரும் அடையாளம், ஓங்கும் தனித்தன்மை,
உள்ள… ‘நிறமூர்த்தம்’ அருளும்.
திண்மையொடு வீரம், செல்வம், கலை, ஞானம்,
சேரும் ‘பரவணியின்’ வழியும்.
சின்னத்தனம் சிலது உள்ளதெனும் போதும்
சிதைந்தழிந்த தில்லை உறவும்.
தெய்வம் அருள்நல்க, தேவர்களும் வாழ்த்த
தீரர்களின் ஈகம் கவிய…
செம்மை அறம் காக்க, சேரும் கலை ஆர்க்க
செந்நெறியில் செல்வோர் நிறைய…
பொய்யுரைக்க, தீமை செய்ய, பிழையின்பின்
போக, நினையாதோர் பெருக…
போலிகளின் பின்சென் றோய்ந்தழிந்தி டாது
புத்துயிர்க்கும் எம்மண்…அறிக!