ஏறெடுத்துப் பார்க்க எவருமற்று
அன்றொருகால்
பாரதி தன்னுடைய ‘பாட்டைத்’
தினமெழுதிக்
குவித்த படியிருந்தான்!
கொடு வறுமை துரத்திவிட,
புவியோடு உறவு சுற்றம் புறக்கணிக்க,
மனக்கொதிப்பைக்
கொட்டத் துடித்து…
கைகொட்டி இரசிப்பதற்கு
கிட்ட ஒருவரற்று…
கிளர்ச்சிக் கருத்துகளைத்
தனக்குத்தான் சொல்லி,
சமூகம் செவிமடுக்கா
நனவினிலும்… அவற்றை நவகவிதைகளாய் ஆக்கிச்
சொரிந்தான்!
‘பழமையாளர்’
“சோதனைதான் தமிழ்க்கவிக்கு
வரவேற்கோம்” என அவனை மறை(றி)த்தார்கள்.
அவன் எவரின்
கருத்தையும் கணக்கெடாமல்
கனன்ற கவிமனதில்
திரண்டு… கவிதைகளாய்ச் சேர்ந்தவற்றை… எல்லாமும்
பொறித்துவைத்தான்!
அவனின் உறவு அவன் ‘பொருளை’
வெறுத்து ஒதுக்கிற்று!
வெற்றியோடு வருமானம்,
பெறுமதிசேர் பாராட்டு, பேர் பெருமை,
எதும்கிடைக்காப்
பொழுதினிலும்,
சுற்றம் புகழாத சூழலிலும்,
“முழுமடையன்” என்று
முன்னின்றோர் பழிக்கையிலும்,
எழுதினான்;
தன் சித்தம் எண்ணத்தை
எவருமேற்காப்
பொழுதும் எழுதினான்;
புரட்சி அக்கினிக் குஞ்சைக்
கொழுத்தினான்; சுற்றிக் குவித்தான்;
அதன்புகையை,
அதன்சூட்டைக், குணத்தை,
அயல்அறியாத் துயரினிலும்…
சதிசெய்து கற்றோர் தடைபோட்ட வேளையிலும்…
ஏறெடுத்துப் பார்க்க எவருமில்லாச் சூழலிலும்…
யாரெவரும் அங்கீ கரிக்கா நிலையினிலும்…
இலாபம் வருமானம் எதுமில்லா வறுமையிலும்…
எழுதி என்ன பயனென்று எண்ணாமல்
“மனதிருந்து
ஆதி பராசக்தி ஆணை இடுகின்றாள்
பாலிக்க வந்தேன் யான் பாரை”
என அன்று
பாரதி ‘பாடி – விட்டுப்’ போனான்!
இன்றவனைப்
பாடாத ஆட்களில்லை.
போற்றாத வாய்களில்லை.
தேடல்,
அவன்பற்றி ஆராய்ச்சி,
தீரவில்லை!
அன்றைக்குப் பாரதிபோல்…
அவன்வழியில் பாவலர்கள்
இன்றைக்கும்;
அவர் வாழ்வு ஏற்றம் பெறுகுதில்லை!
ஆனாலும் பாரதியின் வாழ்வே
‘அனைவருக்கும்’
பாடம்; அது சொல்லும் காலத்தின்
தத்துவத்தை!
அங்கீகாரம் இன்று அணுகிவில்லை
எனினும் விதி
மங்காமல் காக்கும் மகத்துவக் கவிகளினைச்
செங்கம்பளம் விரிக்கும் தேடி;
என்பதே உண்மை!