“தங்களாலேனும் கிடைக்குமா” என்று

உன் துவக்கின் தோட்டாவோ,
உன் கரத்தின் தடி பொல்லோ,
அன்றவனைச் சாய்க்க…
அள்ளி எடுத்துவந்து;
மாரி பொழிந்துமே வாரடித் தோடியதால்
ஈரஞ் சுவறி இருந்த
சுடலை மண்ணில்,
மைம்மற் பொழுதில்,
மண்வெட்டியால் மேலால்
சும்மா கிளறி நட்டாய்!
சூழ மனிதரற்ற
நாட்களில் பேய்களே நடமாட…
பிணங்கள்
கூட்டம் கூட்டமாக அங்கு வந்து குவிய…
நீயும் உன்னோடு நின்றோரும்
கடைவாயில்
ஓடும் குருதியை
ஒருகையாற் துடைத்தபடி
அவனையும் புதைத்து அகன்றீர்கள்.
அடுத்தெங்கே
எவன்என்று பேசி நகர்ந்தீர்கள்.
அவனின்
உயிரும் குரலும் உணர்ச்சிகளும்
கண்ணீரும்
அயலை அசைக்க ஏலா யதார்த்தத்தில்…
நீதி கேட்டு
அவன்குருதி முதலில்
அயலெங்கும் சிந்திற்று!
சிதைந்த பிணநாற்றம்
நியாயத்தைத் தேடிற்று!
உதிர்ந்த முடி, தோலும்
ஒழுகிய நிணம், கொழுப்பும்,
எங்கேனும் அறமிருக்கா என்றேங்கிப் பார்க்க…தன்
பங்கிற்குத் தசை,நரம்பும் அழுகி
எவரேனும்
தர்மர்கள் உள்ளனரா எனக்காத்துச் சிதைந்தழிய…
இருந்த உக்காப் பொருட்கள்
இனங்காட்ட ஏங்கிநிற்க…
விரைவில் சிதறியுக்கி,
கிருமிகளால் பிரிகையாகி,
அவனும்…
அவனோடு அள்ளிவரப் பட்டவரும்
எவரும்…தம் இறப்பிற்கு
எதும் பரிகாரமற்று;
” ஏன்மரித்தோம்” என்பதற்கு
ஏற்றபதில் கிடைக்காது;
மண்ணோடு மண்ணானார்!
நேற்றைக்குத் தற்செயலாய்
எலும்புக் கூடொன்று கிடங்கு வெட்ட
வந்து…பின்
பொலுபொலென்று இருநூறு
கூடுகள் புறப்பட்டு
“இறுதி நீதி தங்களால் எனினும்
கிடைக்கு” மென்றா
வெறித்தபடி எங்கள்
விழிகளையே பார்த்துளன?
வரும் நல்ல தீரப்பென்றா சாட்சிசொல்லக் காத்துளன?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.