கலையாத கல்வியும், கரையாத செல்வமும்,
கனல்கின்ற வீரமதுவும்,
கருகாது வாழ்வினைக் களித்தோங்க வைப்பவை;
கவின் சூழ வரந் தாறவை;
உலகத்தில் உன்பேரை உயர்தாள வைப்பவை;
உடன் தேட… ‘சக்தி’ களினை
உணர்வோடு போற்று இந் ‘நவராத்திரி நாளில்’!
உளமார வேண்டு… துதிசெய்!
மும்மூன்று நாட்களும் முத்தேவியர் நாமம்
முறையாகச் சொல்லி அழைத்து;
முக்கனி, கற்கண்டு, அவல், சுண்டல், வடை, பொங்கல்,
மோதகம் வைத்தும் படைத்து,
செம்மை சேர் பா, இசை, செந்தமிழ்ப் பேச்சுகள்,
சீர் நட மாடி, அளித்து;
தேடுவோம் கல்வியும் செல்வமும் வீரமும்
தேவிகள் வாழ்த்த… வளைத்து!
கல்வியில் ஞானமும், செல்வத்தில் ஈதலும்,
வீரத்தில் நீதி நெறியும்,
காணலே… வாழ்க்கையின் அர்த்தமாம் நோக்கமாம்;
காணாதே… நலியும் மனிதம்!
பல் ‘கலை’, பல் ‘பொருள்’, பல் ‘பலம்’ கொண்டிடில்
பாரிலா தீமை விளையும்?
பற்றுவோம் அன்னையர் மூவரின் பாசத்தை…
பலன் கண்டு உய்ய முடியும்!