அன்னை எனும்சக்தி மூன்று
வடிவெடுக்க அன்னவரை
நின்றும் கிடந்தும் நினைந்து வணங்கி நெகிழ்ந்துருகி
“என்ன கலை செல்வம் வீரம் இருக்கிறதோ எல்லாமும்
குன்றாமற் தாரு”மென்று கேட்போம்; கொடுப்பராம்… கொள்வோமே!
கல்வி யொடுசெல்வம் வீரம் எனநம் கனவுகளை
வெல்லவைக்கும் ஆற்றல்கள் வேணுமே வாழ்வு விளைந்தெழவே!
இல்லை இதிலொன்று என்றாலும் எஞ்சும் இழப்புகளே!
‘மெல்லியலார்’ மூவ ரிடமும் வரம்கேட்டு வெல்வோமே!
கற்றுயர்ந்தோன் செல்வமும் வீரமும் இல்லாக் களங்களினை
முற்றாய் ஜெயிக்க முடியா…ததுபோல் முறையாக
மற்றவையும்; ஏனைரெண்டும் இல்லாது என்றுமே வாகைசூடி
நிற்கா…தியற்கை நிஜத்தை நினைந்து நிமிர்வோமே!
மும்மூன்று நாட்களும் முப்பெரும் மாதர் முகம்பார்த்து,
எம்மனதின் ஏக்கங்கள் தீர்த்திட ஏங்கி, இசைபொழிந்து,
செம்மை அவல்பொங்கல் சுண்டல் படைத்துச், சிலிர்த்துயிர்த்து
எம்மை இழந்தால்… எமக்கு அருள்வர் இர(ற)ங்கிவந்தே!
வீடுகளிற் பூசை, ‘விஜய தசமி’யன்று வித்தைகற்றல்,
‘ஏடு தொடக்கல்’, நம்நம் தொழிற்கருவி இட்டெடுக்கும்
‘ஆயுத பூஜை’செய்து, ஆழக் கலைகள் அரங்கேற்றிப்
பாடிப் பரவிப் பணிவோம்; வாழ்வில் பயன்பெறவே!