இரவும் ஒரு இறையே!

பெளர்ணமிக்கு ஓரிரு நாட்கள் இருக்கிறது.
கெளவிற்று இரவுப் பறவை
பகற்பழத்தை.
முக்கால் வாசி முட்டை மஞ்சட் கருவாக
நிற்கிறது பொன்நிலவு
எனது தலைக்குமேல்.
முன்நீளும் பெருந்தெருவை
மூன்று நான்கு வாகனங்கள்
மின்னிக் கடந்துளன
ஒவ்வொரு கணங்களிலும்.
காணாமற் போனதின்று காற்று;
இடைக்கிடைதான்
சாமரமாய் வந்துவீசிப் போகுதது.
ஏதேதோ
பட்சி, அணில்களது கீச்சுக் குரல்கள்
அவை
நித்திரைக்கும் போகவில்லை இன்னும்
என்று நினைவூட்ட…
தூரத்திற் கேகும் கொக்குகளோ நாரைகளோ
கூவிக் கடந்துளன
நானிருக்கும் மரத்தடியை.
சில்வண்டுகள் மட்டுமே தம்புராவாய்த் தொடர்ந்திசைக்க
வெள்ளாந்தியாய் இரவு
மோனராகம் பாடிடுது.
சில்வண் டிரைச்சல் எரிச்சல்தான்;
எனினும் அச்
சில்வண்டிசை இல்லாட்டில் இரவு
இனிதாய்க் கழியாது.
என்ன இனிமையான இரவு?
மனம்மயக்கும்
என்ன இளமையான இரவு?
இதற்குள்ளே
தனிமையும் கவிதையும் தான் துணையாய் இருக்கின்றேன்.
மனதிற் கித ‘மணிக் கவிதைகளை’ வாய்விட்டுப்
படிக்கப் படிக்கப்
பரவசத் திரவமட்டம்
தொடர்ந்துயர்ந்து என்னை மூழ்கடிக்கக் கிறங்குகிறேன்.
இத்தகைய மோன இரா, அமைதிக்குள்
துயர் துன்பம்
எத்தனைதான்?
வலி, நோக்கள் எத்தனைதான்?
கவலைகள்
எத்தனைதான்?
ஆதங்கம் ஏக்கங்கள் எத்தனைதான்?
சித்தித்த தின்பமென்று
சிலிர்த்திணைவோர் எத்தனைபேர்?
சுத்திவரும் ‘தாமசத்தில்’
மயங்கிடுவோர் எத்தனையோ?
அத்தனைக்கும்…
சற்றுநேர ஆறுதல் மடிதந்து,
பெத்ததாய் போல்வருடிப் ‘பிணை’யெடுத்து,
தாலாட்டி
ஆழ்ந்து துயிலவைத்து,
அடைக்கலமும் உவந்து,
ஆளை மயக்கும் அதிசயக் கனவுகளால்
வாழ்வில் கிடைக்கா வரங்களைக் காணவைத்து,
வாழும் உயிர்கள் அனைத்தினதும்
நிதம் களைத்த
ஆழ்மனமும், உடலும், அயர்ந்து
புத்துயிர்க்கவைத்து,
வாழ்த்துவதே… இரவின் மகத்தான பணி; அதனை
வாழ்த்துவதே இக்கவிதை!
வலி, கவலை, நோ தீர்க்கும்
மா மருந் ரதிவை வணங்குகிறேன்!
‘ஒரு இறையே
தான் இரவும்’…அதனை
இக்கணத்தில் உணர்கின்றேன்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.