முத்தேவியர் புகழ் பாடு.

சிங்கத்தில் வந்தே திசைகாக்கும் ‘துர்க்கை’யவள்
பொங்குகிற வீரத்தைப் போர்த்திறணை -எங்களுக்குத்
தந்தருள்வாள்; சூழும் தடையுடைத்தும் வெல்லவைப்பாள்;
வந்தனைகள் செய்;வா மகிழ்ந்து.

அஞ்சாமை, ஆற்றல், அறப்பக்கம் நின்றுவெல்லல்,
சஞ்சலங்கள் சாய்க்கின்ற தற்துணிவு – கெஞ்சியுயிர்
வாழா மறம், தீரம், வாழ்நாளில் வேணுமிவை…
தாற துர்க்கை தாழடியைச் சார்.

செந்தா மரைக்கன்றில் நின்று திரு, செல்வம்
தந்தருளும் தேவி தனைத்தழுவி-அந்தரங்கள்
எங்குசென்றும் மாய்க்கின்ற செல்வங்கள் பெற்றுயர்க!
தங்கும் பொருளவளாற் தான்.

பொருளற்றோர் என்றும் ‘பொருளற்றோர்’ என்று
உரைத்தார் பெரியோர்கள் உண்மை! -சரியாம்
வழியில் ‘இலஷ்மீ கடாட்சம்’நீ பெற்றால்
எழில்நிலைக்கும் என்றென்றும் எண்ணு!

நெஞ்சில் கலை,கல்வி நித்தம் பயிரிட்டு;
துஞ்சாமல் வெற்றி துளிர்க்கவைத்து; -அஞ்சற்க
சொல்லுமன்னை…வாழ்வென்னும் சோலை செழிக்கவைப்பாள்.
வல்’நா மகள்’ சீரை வாழ்த்து.

சொல்லின் வகைதெரிந்துஞ் சூட்டி,
பொருளுயிரும்
எல்லா அணிஅழகும் ஏற்றி, நிதம்- நல்லகவி
யான்பாட வைக்கின்ற தாய்’கலை வாணி’புகழ்
நாள்தோறும் பாடிடுவேன் தான்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.