‘சகல கலாவல்லி’, சக்தி, அவளின்
புகழினைப் போற்றும் பொழுதில் – அகங்கள்
குளிரும்; உடலில் குதூகலம் பொங்கும்;
விழிகசியும்; பக்தி மிகும்.
பிரபஞ்சம் தன்னைப் பிடித்திழுத்தே ஆட்டும்
பெருஞ்சக்தி தன்னைப் பெரியோர்-தெரிந்துணர்ந்து
போற்றத்… தமிழர் புரிந்துஅதைப் பெண்வடிவாய்
ஏற்றித் தொழுதார் இசைந்து.
சடங்களாய் ஆண்களும், சார்ந்தே இருந்து
உடனியக்கப் பெண்களும், ஒன்றாய்த் – தொடர்தல்
இயற்கை நியதி; அதை என்றோ தெளிந்தே
உயர்த்திற்றெம் ‘மார்க்கம்’ உணர்.
பெண்உருவில் சக்திகளைப் பேர்த்தும்; வகைபிரித்தும்;
கண்ணியஞ்சேர் மூன்று கடவுளென்றும்; – மண்ணினிலே
வீரம், திரு, கல்வி மீட்க…மூன்று தேவியரை
சேர்த்ததெம் ‘சைவம்’ தெரிந்து.
மும்மூன்று நாட்களும் முப்பெருந் தேவியர்க்குச்
செம்மை விழாவெடுத்துச் சீர் செழிப்பு- எம்வீட்டில்,
வேலைத் தலத்தில், வியாபார மையத்தில்,
கால்பதிக்க வைப்போம் கனிந்து.
கும்பம், கொலுவைத்து, கோவிலெனச் சோடித்து,
தெம்பாய்ச் ‘சகலகலா வல்லிமாலை’- நம்பியே
பாடிப் பயன்சொல்லி, பாங்காய்க் கவிபடைத்து
ஆடலும் அர்ப்பணிப்போம், ஆர்த்து.
அவல்,சுண்டல், கற்கண் டமுது, கரும்பு,
சுவைக்கனிகள், வைத்துத் தொழுது – எவைவரங்கள்
வேண்டுமோ கேட்போம்;
வினையகல நேர்வோமாம்;
ஆண்டுதொறும் போல… அழைத்து.
ஆய கலைகள், அருந்திருக்கள், மெய்வீரம்,
வாய்த்தாலே வாழ்வில் வளம்கொழிக்கும் – ஓயாமல்
அன்னையரைத் தேன்பா, இசை, பேச்சால் அர்ச்சித்து
வென்றெடுப்போம் வாழ்வின் விருது!