இரவின் அடர்ந்த இருட்டுக்குள்த் தானே
உருவாச்சு கிழக்கில் ஒளியின்
முதற்துளியும்?
அந்த ஒளி ‘நுகத்தை’ ஆக்கியே விட்ட ‘சூல்’
‘விந்து’ எவையெவைகள்
புணரப் பிறந்ததென்ற
விடை தெரியாக் கேள்வி மனதைக் குடைந்திருக்கும்!
ஒளி ‘நுகம்’ …கணங்கள்
ஒவ்வொன்றும் கழிய
ஒளி ‘இழையம்’ ஆகி,
ஒளி ‘ அங்கங்களாய்’ மாறி,
ஒளி ‘ உடலம்’ தோன்றி,
ஒளிக்கதிர் விரல்களுடன்
ஒளிப் பகலாய் ஊறி,
புவியொளித்து வைத்தமர்மம்
துலக்கி,
திசைநான்கை துடைத்துலகம்
பார்க்கவைத்துச்
சிலிர்ப்பான காலையைச் செய்திடுது!
இரவின்
கருப்பை கிழித்துமே
காலால் வெளியேறும்
‘பொறி – ஒளி’ எவ்வாறு பூதமாய் வளர்ந்திடுது?
மறுபடியும் அந்தியில்
மரிக்கும் ஒளிச் சடலத்தை
சிறிது சிறிதாய்ச் சிதைத்து விழுங்கியே
இரவு பழிதீர்த்து எழும்;
அதன் கருப்பைக்குள்
ஒளியின் ‘நுகம்’ மீண்டும் எவ்வாறு உருவாகும்?
அழகியல் கற்பனை ஓசை போனால்..
கவிதையிலும்
ஒளி எங்கே தோன்றும்?
இருண்மையா கவியாகும்?