வரலாற்றில் வாழ்தல்

யார் யாரோ இருந்தார்கள் அன்று… ஆனால்
யாரெவரும் இல்லையின்று…“தாம் தான்” என்று
யார்யாரிங் கிருக்கிறார்கள்?நாளை நன்றாய்
யார்யாரிங் கிருப்பார்கள்? “முழுதும் உண்மை”
யாரிதனைப் புரிந்தார்கள்? கோடிபேர்கள்
வருவதுவும் போவதுமாய் இருக்கிறார்கள்!
சீறி… ஏதோ பேசி சட்டம் நூறியற்றி
சிறந்துயர்ந்தோர் கடைசியிலே என்னா னார்கள்?

கோடானு கோடிபேரின் எண்ணம்… அன்னார்
கொட்டி முழங்கிவிட்ட கருத்துச் சொற்கள்
பாடிவைத்த பாட்டுக்கள் எழுத்து எல்லாம்
பாடையேறிப் போனதெங்கே? அவர்கள் போட்ட
வேடங்கள் சட்டங்கள் தொலைந்த தெங்கே?
நினைவில் நிற்குதா அன்னார் பெயர்கள்…எங்கே?
நூற்றாண்டின் முன் ஆண்டு சுவடே இன்றி
நூர்ந்தார்கள் கோடிகோடி பேர்கள்… எங்கே?

காலமெனும் காற்றடிப்பில் கலைந்து போகும்
கருஞ்சாம்பற் துகள்களைப்போல் மனிதர் போவார்!
வாழுகையில் எத்தனையோ அனுபவித் தாண்டு
வரலாற்றில் வெற்றிடங்களாகி… மாய்வார்!
ஓரிரண்டு நாள் உறவின் நினைவில் வாழ்ந்து
உழுத்திந்த மண்மறக்கத் தொலைவார்… யார்தான்
தேறினார்கள்? காலத்தை கடந்து வாழும்
தேவர்… ஒருசில மனிதர்… நிலைத்தும் வாழ்வார்!

மனிதரின் பேர் மறையாமல் வாழ்வதற்கு,
மகத்தான வரம்பெற்று நிலைப்பதற்கு,
நனவினிலும் கனவினிலும் நினைவு கூர்ந்து
நானிலமும் தொழுவதற்கு,‘மனிதம்’ என்ற
குணம்நூறு சதவீதம் கொண்டு தர்மக்
கொள்கைவழி நின்று காலக்கடன் நீ தீர்த்தால்
நிணம் சதை தோல் இரத்தம் எலும்பிவை சிதைந்தும்
நீவாழ்வாய் வரலாற்றில் இயற்கை வாழ்த்தும்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply