யார் நீங்கள்?

யார் தான் நீங்கள்?
யாவர் தான் நீங்கள்?

ஆம் புதிய நாடகத்தின் பாத்திரங்கள் நீவிரென்றார்.
ஆம் புதிய நாயகர்கள் என உங்கள் முகமுரைத்தார.
நாடகமா? யதார்த்தமா? நாமறியோம்!
நீவிரந்த
நாடகத்தின் பாத்திரமா? நடிப்பே தெரியாத
சூழ்நிலையின் கைதிகளா?
உண்மைகளை யாரறிவோம்?
நாடகம் அரங்கேறி நாடகம் நடந்தேறி
நீர் மரணம் ஏற்கும்
நிரந்தர முடிவோடே
நாடகம் நிறைவுபெற நாம் வெதும்பிக் கிடக்கின்றோம்!

யார் தான் நீங்கள்? யாவர்தான் நீங்கள்?
நீங்கள் நடிகர்களா?
நீர் கதா நாயகரா?
தேவையற்று ‘சீனுக்குள்’ நுழைந்து மாட்டிக் கொண்டவரா?
வாழ்வோர் நாடகமாய் மாறியதால்…
நிஜமோ
நடிப்போ எதுவென் றறியாமல்
யதார்த்தத்தின்
பழிசுமந்து காளிக்கு பலியிடப் பட்டவரா?

என்னதான் நாடகம்?
என்ன வகை நாடகம்?
என்ன கதை வசனம்? யாருக்கிந் நாடகம்?
எங்கெங்கே மேடையேறும்?
எவர் திருப்திப்படவைக்கும்?
எங்களுக்கும் புரியவில்லை…
புரிந்து நீர் நடித்தீரா?
புரியாமல் நிஜமே புனைவாக… ஏனென்று
புரியாமல் பலிக்கடாவாய்ப் போனீரா?
இன்றைக்கு
நாடகம் முடிந்ததென
உங்கள் சடலங்கள்
ஊரின்முன் காட்சிதர… திரைச்சீலை போட்டுவிட்டு
போனார்கள் எல்லோரும்
ஊமையாச்சு ஊருலகம்!

யார் தான் நீங்கள்? யாவர் தான் நீங்கள்?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply