உள்ளுறையும் ஆற்றல்

ஒரு குவளை தண்ணீர்
குடித்து நிமிர்கையிலே
சிறிதளவு… சிந்திச்சிதறிற்று துளிகளாக!
சிந்திய துளிகள்
மிகமிகவும் சாதுகளாய்
சிந்திய நொடியில் மறைந்துபோச்சு ஆவியாக!
தண்ணீர் அத்தனை
சாதுவென எண்ணிநின்றேன்,
இன்றிந்தப் பெருமழையின் பின்பு
பெருக்கெடுத்த
வெள்ளத்தைக் காண்கையிலே…
அதை அகற்ற முயல்கையிலே…
மல்லுக்கு நின்று மனிசரை
உயிர்வகையை
கொல்லவும் துணியும் கொடுந்திரவ அரக்கனாக
அது எடுத்த விஸ்வரூபம்,
என்னை மிரட்டிற்று!
வாரடித்துப் பாய்ந்து வாய்க்கால் வழியெங்கும்
‘ஹோ’ என்னும் இரைச்சலுடன் அதுஓட
காட்டாறாய்
மலையைப் புரட்டி
மண்ணைச் சரியவைத்து
தலைதெறிக்கப் பாய்வதனைத் தான்பார்க்க
புயலெழுந்த
கடலின் அலைகள் கர்ணகடூரமாக
கதறிப் பனையளவு பாய்ந்து
கரைமோதி விழ,
எத்தனையோ ஊரை
எண்ணற்ற கிராமத்தை
கத்திக்கவர்ந்து கடல்வெள்ளம் பொங்கியெழ,
ஒரு குவளை தண்ணீரில்
நான் கண்ட ‘சாந்தியினைத்’
தரிசிக்க முடியாமல்
அதன் குணத்தை…தன்னுள்ளே
அது ஒளித்த ஆற்றலினை…அதன்உறவே
பூமியிலே
மூன்றில் இரண்டாய் இருப்பதனை
அதன் துணிவைக்
கண்டு…
அதன்பெருமை கண்டு
பணிகின்றேன்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply