ஞான நல்லூர்

ஞானநதி இயல்பாய்ச் சுரக்கும் மடி. பாணன்
யாழ் மீட்டிப் பெற்ற நகரின்
தலைமைஊர்.
யாழ்ப்பாணத் தமிழின், சைவத்தின்,
பண்பாட்டின்,
ஆழ்ந்த கலைகளின், அரசியலின், அடையாளம்.
எத்தனை இடர்வரினும்
எத்தனை இடிவிழினும்
செத்திடா எம்குணச் சிறப்பினது ஊற்றுக்கண்.
“பஞ்சம்பழி வந்தாலும் பாரெல்லாம் வெந்தாலும்”
அஞ்சாது அழகு
அழியா தெழும்பு(ம்) இடம்.
“எப்படி இருந்ததெம் இனத்தின் செழிப்”பென்று
இப்போதும் ‘யமுனாரி’ ஏரியூடும்,
‘சங்கிலியன்
தோப்பூடும்’,‘மந்திரி மனையூடும்’…. தொடர்கதைகள்
சொல்லிச் சிலிர்க்கும் சுவர்க்கபுரி.
சங்கிலியன்
கடைசியாய் ஆண்டிருந்த களம்.
அட்டதிக்கினிலும்
படைவீடாய்க் கோவில்கள்
பரிபாலனஞ் செய்ய
தமிழே அரசாண்டு தலைநிமிர்ந்த இராஜதானி.
சுற்றிவரக் குளங்கள்
சூழ்ந்துகாவல் அரண்களாகி
நிற்கக், குளுமை நிழலில் உயிர்பெருக,
அற்புத நிலத்து
அடிநீர் உடல் வளர்க்க,
பச்சைப் பசேலாய்ப் பரவிக் கிடக்கு(ம்) வயல்.
அச்சமற்ற பனைகள்
ஆகாயம் தடவு(ம்) அயல்.
அமிழ்தாய்த் தமிழை
அன்றிருந்து கடைந்தெடுத்தோர்
சமயநெறி–உயிராய் மதித்துத் தழைத்தபதி.
பண்பட்ட மாந்தர்,
பிரதிபலன் பாராதோர்,
விண்ணர், குபேரர்கள், விளைந்து மலிந்ததலம்.
கற்றுச் சிறந்தோர் கடலாக ஆர்ப்பரிக்க
விற்பனரும் நிபுணரும் வென்று நிமிர்ந்தமுற்றம்.
ஆயிரம் கவிஞர்கள்
அவதரித்த வயிறு. பல்
ஆயிரம் கலைஞரை
அன்றிருந்து இன்று வரை
தோன்றவைக்கும் அமுத சுரபி.
பொழுதெல்லாம்
நாத சுரமும், தவிலும், நறுங்குழலும்,
வேதமும், தேவாரம், மந்திரமும், பண்ணிசையும்,
காண்டா மணியொலியும்,
நாட்டுப்புற இசையும்,
பேச்சும், நடிப்பும், பிரசங்கம், கூத்துகளும்,
ஆச்சர்யக் கவியும், அபிநயமும்,
விளையாட்டும்,
மூச்சில் கலந்து தலைமுறை தலைமுறையாய்
காய்த்துக் குலுங்கும் கவின்நல்லை!
நாவலரின்
தாய்பூமி
தமிழுக்காய்த் தம்மை விதைத்தவர்க்கு
பாயாய்க் கிடந்ததரை.
பாய்ந்து தொடர்ந்தழித்த
பேய்யுத்தத் தாலும் பெரிதாய்க் குலையாமல்
மீள்எழுச்சி பெற்று
விதி செய்த மேன்மைநிலம்.
பிறர்க்கு வழிகாட்டும் பெருங்கல்விக் கோபுரங்கள்
நிறைந்த வெளி. வந்த
பிசகெல்லாம் நீற வைக்கும்
அறமும் தவமும் அருளும் அகிம்சையதும்
பெருக…. அந்நியத்தைப்
பரப்பநின்றோர் தோற்றதிடல்.
பிறரும் விரும்பிவந்து பெருமை பெற்றுயர்ந்த நிழல்.
புதுமைகளை உள்வாங்கி
பழமைகளின் உயிர்ச்சாரம்
சிதையாமல் இயற்கையாகச் சிறப்புப் பெறும்பூமி.
ஞான நதி இயல்பாய்ப் பாயும் மடி…. நூறு
ஞானியரும் சித்தர்களும் திரிந்து
சமாதியாகி
ஆன்மீக அதிர்வை அள்ளிச் சுரந்திருக்க,
வானோரும் மண்ணோரும் வணங்கவரும்
நல்லூரான்
கோவில் கொண்டமர்ந்து குறைதீர்க்கும் குடிலிந்த
நல்லூர்!
இலங்கையின் சென்னியாழ்ப் பாணமென்றால்…,
நல்லூர்….அந் நெற்றியிலே
ஞானநெற்றிக் கண்ணேதான்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply