வசந்தம்

வலையெறிந்து போகிறது வசந்தம்!
இளங்காற்று
தலைகுளப்பி மேனியிலே
தடவும் சுகந்தத்தை!
சந்தனத் தென்றல் வருடிச் சுகம்கேட்கும்!
மந்திரஞ் சொல் அலைகள்
வான்மண்ணைப் பூசை செய்யும்!
ஆழக் கிணற்றின் அமுதும்,
பசுமைபோர்த்துச்
சூழ்ந்து கிடக்கும் துணை வயலும்,
வாய்க்காலில்
வற்றாது பாயும் வர நீரும்,
தோட்டமெங்கும்
முற்றி விளையும்
முருங்கை வெண்டி கத்தரியும்,
தட்டுப் பாடின்றித் தரும்வசந்தம்…
நம்மூரின்
கட்டுத் தளைஅறுக்கும்!
காத்தானும் வசந்தனும்,
கேட்டுக் கிறங்கவைக்கும்
கிண்கிணிச் சதங்கைகளும்,
ஆட்கொள்ளும் நாத சுரம் தவிலும்,
திருவிழாவின்
பாட்டுகளும், கூத்தும்,
பக்திப் பரவசமும்,
ஆட்டக் காவடியும்,
அதிரும் பறையொலிக்கப்
பொங்கலும், படையலும்,
வாழ்வைப் புதுப்பிக்கும்!
வலையெறிந்து போகிறது வசந்தம்;
ஆம் இம்முறையும்
நிலைகுலைந்து போகாமல்
நிமிரவேணும் நம் முதுசம்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.