மலைத்தோம் கண்டு

தீந்தமிழின் அடையாளம், தெய்வச் சொத்து,
சிறுவாழ்வின் – பேருண்மை பகரும் வேதம்,
வான் மறை, நற் தெய்வ வாக்கு, அடிகள் ரெண்டுள்
வழக்கிலுள்ள தத்துவங்கள் உரைத்த பாக்கள்,
மாந்தருள்ள வரை வாழும் நெறிநூல்,
வைய
மாந்தருக்கும் அருமருந்து, அமுது, என்று
வேந்தர்முதல் பாமரரும் ஏற்றிப் போற்றும்
மேன்மைமிகு திருக்குறளை வணங்கு கின்றோம்!

திருக்குறளைப் படைத்தளித்த தெய்வச் சான்றோன்
திருவள்ளு வனைப்பணிந்தோம்; அன்னான் அன்று
அருளிய நூல் பலபதிப்புக் கண்டு,திக்கு
அனைத்தினிலும் மொழிமாற்றம் பெற்று, யார்க்கும்
வரமாகக் கிடைக்குதின்று…மகிழ்ந்தும் கற்றோம்!
வரலாற்றில் முழுக்குறளை கல்லில், கையால்
வடித்துவைத்து அதற்கென்றோர் வளாகம் கண்ட
சரிதமில்லை; அது ‘மாவை’ மண்ணில் இன்று
சாத்தியமாய் ஆகிறது; மலைத்தோம் கண்டே!

‘ராஜராஜன்’ ‘பெருங்கோவில்’ தஞ்சை மண்ணில்
சமைக்கையில் நாம் பார்த்ததில்லை; அவனின் கோவில்
ஆயிரமா யிரம் ஆண்டு தாண்டி இன்றும்
அவன்பெயரைச் சொல்கிறது! இன்று எங்கும்
கோடிகோடி பேர் வாழ்ந்துதிர்ந்தும்… அன்னான்
கோவில் வாழ்ந்தொளிர்கிறது; அதுபோல் இன்று
ஓர் வளாகம் திருக்குறளுக் கெழுதல் பார்த்தோம்
உடனிருந்து; இது எமது வாழ்வின் பேறு!

‘திருமுருகன்’ என்ற எங்கள் ‘ராஜராஜன்’
‘சிவபூமி திருக்குறள் வளாகம்’ கட்டி
தரையுள்ள வரைவாழும் சரிதம் செய்தார்!
தனவந்தர், கொடையாளர் உதவி னார்;இவ்
வரலாற்று நிகழ்வில் நாமும் பங்கு கொள்ளும்
வரம்பெற்றோம்; என்ன தவம் செய்தோம்? ஈஃது
‘இருபத்தைந் தாண்டு வெள்ளி விழாவைக்’ காணும்
‘சிவபூமி’ அடைந்த ‘மைல் கல்லே’ என்போம்!

‘சிவபூமி திருக்குறள் வளாகம்’ இன்னோர்
‘திருக்குறள் ஆராச்சி நூல் நிலையம்’ மற்றும்
நவ ‘தியான மண்டபம்’, ‘ஆய்வாளர் இல்லம்’,
நற்செல்வர் கைங்கர்யத் தாலே இன்று
புவிவியக்க ‘மாவை’ மண்ணிற் பூத்து வாடாப்
புதுமலராய் யுகயுகமாம் வாழும் நின்று!
அவதாரம் நிகர்த்த திரு முருகன் சேவை
அவனியுள்ள வரை போற்றப்படும் காண் இங்கு!

‘செயல் சிலதைக்’ கண்டெவரும் வியப்ப துண்டு!
‘தெய்வஅருள்’, ‘பூதகணப் பலத்தோ’ டல்லால்
இயலாது அவை எனும் ஐதீகம் உண்டு!
இம்மண்ணின் தமிழ்ச் சைவக் குரவர்;
பேச்சால்
உயர்ந்த திரு முருகர்; இடையறாது ‘செய்தும்’
உலகுக்கு உவந்து தமிழ் சைவம் தன்னை
உயர்த்துகிற சேவைகளும் அதுபோல் என்போம்!
உளமார வாழ்த்திப்… பணி தொடர நேர்வோம்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.