நான் யார்?

“நல்லவனா கெட்டவனா நான்” என
மனச்சாட்சி
மெல்ல என் முன் நின்று
எனைக் கேள்வி கேட்டபோது…
“நல்லவனா கெட்டவனா நான்”
என்று நான் கேட்டேன்.
நூறு வீதம் நல்லவன்யான் அல்ல அதைத்தெளிவேன்.
நூறுவீதம் கெட்டவன் தான் அல்ல இதும்புரிவேன்.
நல்லவர்க்கும் கெட்டவர்க்கும்
இடையே சதவீதம்
அடிக்கடி மாறுமிதை அறிவேன்.
பலசமயம்
நல்லவனின் சதவீதம் அதிகரிக்க மகிழ்ந்துள்ளேன்.
கெட்டவனின் சதவீதம் அதிகரிக்கச்
சிலநேரம்
என்னை நானே எண்ணி வெட்கித்
துவண்டுள்ளேன்.
பலநேரம் நல்லவனாய்ப் பயணித்ததால்
என்னை
பலபேர்கள் நல்லவன்தான் என்கிறார்கள்.
சில நேரம்
கெட்டவனாய் இருந்தேன் யான்
இவர்கள் அறியார்கள்
நானறிவேன்.. காலமும் சூழலும் சுற்றமுந்தான்
நானெதுவாய் இருப்பதென்று
தீர்மானஞ் செய்துதென்று!
நானே அறியாமல் நல்லவனாய்க் கெட்டவனாய்
நான் மாறிக்கொண்டதையும்
நானறிந்தேன் வியக்கின்றேன்
“நல்லவன் நான்” என்று நன்னடத்தை சான்றிதழை
தருவோரைப் போற்றி
பெருமையுற மாட்டேன் நான்!
கெட்டவன் நான் என்று
தீ நடத்தைச் சான்றுதேடித்
தருவோரைத் தூற்றிப் பழிவாங்க மாட்டேன் நான்!
என்னுள் இருக்கும்
நல்லவனின் சதவீதம்
என்வாழ்வில் அதிகமாய் இருக்க
முயல்கின்றேன்.
அதற்காக என்னுள் இருக்கின்ற கெட்டவனை
கொலை செய்து
எனைநூறு சதவீதம் நல்லவனாய்
மாற்றும் வழியறியேன்
நான் யார்? என இப்போ
என்னை நான் உணர்கின்றேன்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply