சூலம் சொல்லும் நாளும் பதில்!

கடலலைகளில் ஏறிநடந்தித்தக்
கரையில் வந்து உறைந்து இவ்வூரது
உடலினுக் குயிராகிய மாரியே!
ஒளிபெருக்கிடும் சூரிய தேவியே!
விடைதெரியா புதிராய் இருந்து நம்
வினையறுத்திடச் சிங்கத்தில் ஏறியே…
படைநடந்திடுங் காளி! மெய் அன்பர்க்குப்
பரிந்து பால் நினைந்தூட்டிடும் அன்னை நீ!

என்று தோற்றினாய் என்று அறிகிலோம்!
இதே வரலாறு என்பதை ஏற்கிறோம்.
அன்றிருந்துமே இன்று வரை உந்தன்
அற்புதங்களைக் கண்டதிசயிக்கிறோம்!
என்றுமுள்ள பூ நீ உனைப்போற்றிட
என்ன புண்ணியஞ் செய்தோம்? வியக்கிறோம்!
நன்று செய்வை நீ… தீமை தொலையவும்
நன்மை பெருகவும் பொங்குவை… நம்பினோம்!

நீதி நியாயமே நின்னிரு கண்களாம்!
நினது தீர்ப்புத்தான் விதியின் கரங்களாம்!
மோதி, உன்னோடு போட்டி போட்டும் ஆடி,
மூட ஆணவம் கொண்டு விலைபேசி
பேதம் காட்டியே ஏய்க்கும் எவரதும்
பிழை பொறுக்காது உந்தன் இதயமாம்!
சூது வாதுகள் தோற்க மெய் ஆழ… நின்
சூலம் சொல்லிடும் நாளும் பதில்களாம்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply