பேய்க்கூத்து

உங்களைக் குதறிய ஒரேஒரு கூர்மைவாள்
செங்குருதி குடித்தேப்பம் விட்டுத்
துயின்றுபோச்சு!
வாளின் கடைவாயில் வழிந்த
இரத்தநதி
யார்நக்கிக் காய்ந்ததின்று?
யமன்போனான் தலைகுனிந்து!
கைப்பிடியில் பதிந்த ரேகைகள்… பேயொன்றின்
கைரேகைக் கொப்பான தென்றன…நம்
ஊடகங்கள்!
மானம்பூ அன்று ஐந்தாறு வாழைகளை
பாய்ந்துபாய்ந்து வெட்டுவதாய்
பாவியவன் வாள்வீச்சில்
மூன்றுயிர்கள் போக…முனகி இரு உயிர்த்திரவக்
கடைசித் துளி வடியாது
காப்பாற்றப் பட்டதென்றார்!
“கட்டிவை” கேட்டு
காமவெறி பெருகி
வெட்டிய தளிரின் விரல்கள் கரம்வேறாய்
எட்டச் சிதறியதாம்…
இரத்தம் உறைந்ததென்னுள்!
கழுத்தின்பின் ஆழமான காயங்கள்
‘அவன்’ விசரின்
அளவுக்கு உவமையாச்சு!
திட்டுத் திட்டாய் அங்கே
கொட்டிய குருதியில் குடும்பம் உறவென்ற
அத்தனையும் மூர்ச்சையுற்ற தறிந்து…
அகம் வலிக்கிறது!

மனிதனென்று தண்டனை தீர்க்காமல்
காட்டேறிப்
பேயைச் சுடலை நெடு ஆலில்
ஆணியடித்
திறக்கவைத்தல் போல்.. இம் மனிதப் பேய்தன்னை
அழிக்காட்டில்.. அன்புறவின்
உயிர் மீண்டுயிர்காது!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply