Archive for the ‘கவிதைகள்’ Category

பாரதி ‘பா ரத’ சாரதி

எட்டய புரத்தில் அன்று 
எழுந்த தீக் குஞ்சு …இன்று 
தொட்டு அடிமுடிகள் காணா 
சுடர்ப் பிழம்பாகி …எங்கள் 
பட்டிகள் தொட்டி எங்கும் 
பரவியே சமூகக் குப்பை 
முற்றாக எரித்து என்றும் 
முளாசுது தொடர்ந்து வென்று.

பாரதி வளர்த்த ஞானப் 
பாட்டுத்தீ ..தமிழின் .நீண்ட 
பா வரலாற்றில் என்றும் 
பகலவன் சுடர்போல் ஓங்கும்! 
பா மரபுக்கும் இன்றைப் 
பல் நவீனங்க ளிற்கும் 
பாலமாய் அவன் பா நிற்கும்.
பாடங்கள் நிதம் கற்பிக்கும்!

பாரதி எங்கள் பாட்டின் 
பாட்டன்…பா ரதத்துக் கான 
சாரதி! சரிதச் சேற்றில் 
தாண்ட பாத் தேரை மீட்டு 
ஊரூராய் இழுத்து வந்தான்!
உலகமும் வணங்க வைத்தான்!
போராடும் சமூக நீதிப் 
புரட்சிக்கும் தேரைத் தந்தான்!

நீண்ட தொல் வரலா றுள்ள 
நிறைந்த நற் தமிழ்ப்பா கற்க 
வேண்டுமாம் நெடிய காலம்.
விருப்புடன் குறைந்த பட்சம் 
பாரதி பாட்டைக் கற்றால் 
பலன் முழுத் தமிழ்ப்பா கற்ற 
மாதிரி ஆகும்! அன்னான் 
யுகசந்தி…பயின்று உய்வோம்!

பாரதி உரைத்த வேதம் 
பாரதி பகன்ற ஞானம் 
பாரதி வளர்த்த வீரம் 
படிப்பித்த சமூக மாற்றம் 
பாரதி இரசித்த காதல் 
பாரதி நினைத்த வாழ்க்கை 
ஓர்தினம் தோன்றும்! அன்னான் 
உயிர்க் கனா நனவாய் மாறும்!

அழிவின் விளிம்பில்

காலாதி காலமாய் கடவுளுக் கஞ்சியே 
காய்த்தது எங்கள் வாழ்வு.
கற்பென்றும் மானமே கண்ணென்றும் நீதிமுன் 
கைகட்டிற் றெங்கள் ஆழ்வு.
வேல்கொண்டு வாள்கொண்டு வென்று நிமிர்ந்தாலும் 
மிக்க பண்பாடு கண்டு 
விழுமியம் காத்தது விதியை மதித்தது 
மேன்மை நூல் கற்று நின்று.
வாழ்விலே நேர்த்தியும் வரலாற்றில் கீர்த்தியும் 
வாழ்முறை கூர்ப்பும் கொண்டு 
மண்ணிலே நூறாண்டு மாண்போ டுயிர்த்தது 
வையம் வியக்க அன்று.
காலங்கள் மாறிற்று கோலங்கள் மாறிற்று 
கடன் ‘மேற்கில்’ நித்தம் பெற்று 
கைவிட்டு… வாழ்க்கையை மாண்பினை ஆயுளை 
கருகுது புதுமை என்று!.

தொற்றாத நோய்களும் தொந்தியும் சள்ளையும் 
தூக்க முடியாத உடலும் 
தொன்மை பெருமையைத் தூற்றி விசங்களை 
சுவறிடச் செய்யும் உணவும் 
பெற்றோரைக் காக்காது பெரியோர்சொல் கேட்காது 
பிழைசெய்யும் போலி மனமும் 
பீடற்ற கல்வியும் பிணிதேடும் வேலையும் 
பிடிப்பற்ற பாசம் உறவும் 
கற்பனை வாழ்க்கையும் கனவில் தொலைவதும் 
கலை வளர்க்காத திருவும் 
கருணை இலாச்சுய நலமதும் ஊர்கூடி 
கைகோர்த் திடாத மறமும் 
அற்புதங்கள் என்றெம் அயலிலும் வாழ்விலும் 
ஆனது இந்த தினமே!
அழிவின் விளிம்பிலே சுயமும் தொலைத்து 
அலையு திழிந்தெம் இனமே!

வானவில் வாழ்த்து

வெயிலும் மழையும் விமர்சயாய் 
மணம் முடிக்க 
கையில் குளிர் முகிலைப் 
பூச்செண்டாய் ஏந்தி 
ஏழு வர்ண வானத்து வில்லாம் கிளி…சாரற் 
பாமாலை தூவி 
பன்னீர் தெளித்து …வாழ்த்துச் 
சொல்கிறது வானரங்கில் 
சுக அந்தி நகர்கிறது!
எல்லையில்லாக் கற்பனைக்குள் 
இதயம் குளிக்கிறது!

மக்கள் ஆட்சி

முடிந்தது தேர்தல் கூத்து!
மும்முர மாக எண்ணி 
விடிந்ததும் அநேக மாக 
விடை…”வென்றார் இவர்தான்” என்று 
பட படப்போடு செய்தி 
பரவிடும்! வென்றோன் நாமம் 
வெடிகளால் அதிரும்! வீழ்ந்தோன் 
மீசை… மண் உதிர வேகும்!

Read the rest of this entry »

காலத்துடன் வாழ்தல்

காலமெனும் பட்சி
இரவு பகற் சிறகை
மாறிமாறி அடித்துப் பறக்க
வரலாறு
தாவி நகர்கிறது!
Read the rest of this entry »

வாக்குப் பண்பாடு

வேட்பாளர் ஆனாற்தான் என்ன …வெற்றி
வேந்தர்கள் ஆனாற்தான் என்ன …ஊரை
ஆட்கொள்ளும் சாமியானால் என்ன …செல்வம்
அடைந்தவரே ஆனாலும் என்ன …கற்ற
கோட்பாட்டாளர் என்றால் என்ன …கஞ்சி
குடிக்கவழி அற்றிருந்தால் என்ன …ஞான
மீட்பர்கள் ஆனாலும் என்ன …வாக்கு
ஒன்றேதான் யார்க்கும் சம உரிமை அன்ன!

Read the rest of this entry »

ஒருநாளதிகாரம்

ஐந்து வருடத்துக் கொருதரம் 
ஓர்நாள் மட்டும் 
வாக்கெடுப்பு நிலையம்தான் நீதிமன்றம்!
அரசசேவை
யாளர்தான் நீதிமன்றப் பணியாளர்!
கட்சிகள்தான் 
வாதாடும் வக்கீல்கள்!
Read the rest of this entry »

ஒற்றுமை கொள்வமா?

மண்ணில் நல்ல வண்ணம் நாம் வாழலாம்.
மனமிருப்பின்…நாம் வெற்றியின் மாலைகள் 
எண்ணுக் கணக்கற்றெம் தோள் சேர்த்தும் ஆடலாம்.
எண்ணம் போல நாம் வாகைகள் சூடலாம்.
விண்ணின் சுவர்க்கத்தை வீதிக் கிறக்கலாம்.
வெற்றி கொள்ளலாம்…நாமொன்றாய் நிற்கில்…நம் 
புண்ணை மாற்றலாம். பொலிவைப் பெருக்கலாம்.
புன்னகை நிதம் பூத்தெழச் செய்யலாம்!

Read the rest of this entry »

வலை

எச்சிலில் இருந்து இழைதிரித்து 
உறையவைத்து 
இச்சிறு சிலந்தி 
எழில்வலை பின்னுகிற 
வேகத்தைக் கண்டு 
வேர்த்துக்கொட்டிய தெனக்கு!
யாரிதற்கிவ் ஆற்றலை அருளியது?
Read the rest of this entry »

பௌர்ணமி அழைப்பு

வானத்தில் வெள்ளிக் குடமாக வட்டநிலா!
வானக் குடத்தால் வழிந்து
எண் திசையும்
பாயும் அமுதம்போற் பரவும் நிலவின்ஒளி!
நிலவு விளக் கொளிர,
நின்ற இருள் கலைய,
அலைபொங்கி ஆர்ப்பரிக்க,
Read the rest of this entry »

தீபாவளி(லி)

ஆடும் வரைக்கும் பேயாட்டம் ஆடிவிட்டு, 
ஆடும் வரைக்கும் 
அறம் நியாயம் மறந்துவிட்டு,
ஆடி…ஒருவன் அழிக்கவர 
அவனின்முன் 
தோற்றுவிடக் கூடாது என்று 
Read the rest of this entry »

சுஜித்

மண்ணை அறியாது விண்ணை அறிவதற்கு
எண்ணியது தவறென்று
இருவயதுப் பாலகன் நீ
இந்தப் புவிக்குயிரை விட்டுப் படிப்பித்தாய்!
தாகத்தால் நா உலர்ந்து தவித்த
ஆழ் துளைக்கிணற்றின்
வாயில் துளிநீராய் வீழ்ந்து
வற்றிப் போய்விட்டாய்!
Read the rest of this entry »

தும்பிச் சூரன்!

ஈட்டி முனைக்கூரில்
தன் ஒருகாற் பெருவிரலை
ஊன்றிநின் றொருநூறு யுகங்கள்
தவம் செய்து
சாகா வரம் பெற்றுச்
சகலரையும் ஆட்டுவித்த
Read the rest of this entry »

கீழடி

தெய்வத் தமிழே! திசைதிக்கில் மூத்தவளே 
வையத் தினுக்கே வழிகாட்டி –உய்விக்கும் 
அன்னாய்…உனதுசேய்கள் ஆம்…உன் பெருமைகளைக் 
கண்டோமே கண்முன் களித்து!

Read the rest of this entry »

யாமறிவோம்

எங்களுக்குத் தெரியும் எதைச் செய்ய வேணுமென்று!
எங்களுக்குத் தெரியும் 
எதுசெய்தால் தவறென்று!
உங்களது கட்டளையை,
உங்களது வேண்டுகோளை ,
உங்களது ஆதரவை,
உங்கள் புறக்கணிப்பை,
உங்கள் உடன்பாட்டை,
Read the rest of this entry »

கவியரங்கக் கவிதைகள்
பெரியோர்கள் போற்றுதும்..
எனது புதிய பதிவுகள்
ஒலிப் “பதிவு”
ஒளிப்பதிவுவெளியீடுகள்

முகப்புத்தகத்தில் தொடர
வருகைதந்தோர்
  • 74609Total reads:
  • 54486Total visitors:
  • 0Visitors currently online:
?>